Wikipedia

Search results

Friday, February 19, 2016

மரணம் தோற்றது;மாமனிதம்வென்றது



நேற்றைய நாளிதழில் (‘தமிழ் இந்து’வில் -  18.2.2016) ஒரு செய்தி, படித்தவுடன் நம் இதயத்தைப் பிழிந்ததுடன் அதிரவும் செய்தது!

இப்படியும்கூட இளைஞர்கள் இருப் பதை விட நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஏன் மனித குலத்துக்கும் வேறு என்ன பெரிய பெருமை வேண்டும்? இதோ அச்செய்தி:
“பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உடல் 2 துண்டுகளான நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார் ஒரு இளைஞர். ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட இளைஞரின் கொடையுள்ளம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட் டத்தில் உள்ள குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன் தினம் குப்பியில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

நெலமங்களாவை அடுத்துள்ள திப்ப கொண்டனஹள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண் டிருந்தபோது, ஒரு லாரி அவரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது அந்த லாரி மோதியதில் ஹரிஷ் அதன் சக்கரத்தில் சிக்கினார். லாரி ஏறியதில் அவரது உடல் இரண்டு துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிருக்குப் போராடிய ஹரீஷை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது ஹரிஷ் கூறும்போது, நான் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள் என கைகளை கூப்பி, கதறி அழுதார். இதைக் கண்டவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போனதாக சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் ஹரிஷ் ஏற்றப்பட்டு, அடுத்த 8 நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உடல் இரு துண்டுகளாக ஆன நிலையிலும் அந்த இளைஞர், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேசியது மனதை நெகிழச் செய்தது என மருத்துவர்களும் காவலர்களும் தெரிவித்துள்ளனர்.”
தான் சாவது நிச்சயம் என்று அறிந்த நிலையில், எத்தகைய மனிதநேயத்தோடு அந்த 26 வயதே நிறைவடைந்த அந்த கிராமத்து இளைஞனின் கொடை யுள்ளத்திற்கும், திடமான பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட முடிவுக்கும் எளிதில் வேறு எடுத்துக்காட்டு கூற முடியுமா?
வழி தவறிய இளைஞர்களைப் பார்த்து இளைஞர் உலகமே சீர்கெட்டுப் போய் விடுகிறது என்று பொத்தாம் பொதுவில் பலரும் சலிப்புக்கு ஒலிகொடுக்கும் நிலையில், ஹரிஷ் போன்ற ஒப்பற்ற கொடையாளிகளின் மாமனிதம் மரணத்தை வென்றது; அச்சம், சுயநலத்தைக் கொன்றது.
மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் அவருக்கு நமது வீர வணக்கம்!

- கி.வீரமணி