வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு வார்த்தை `இன்டர்வியூ'
எல்லாம் தெரிந்தவர்கள் கூட வட்டமேசை மாநாடு மாதிரி ஒன்றுக்கு மூன்று அதிகாரிகளை பார்த்ததும் பதட்டத்தில் வார்த்தைகளை தொலைத்தவர்களாகி விடுகிறார்கள். தெரிந்த கேள்விக்கும் தெரியாத மாதிரி இவர்கள் `பய' அபிநயம் பிடிப்பது இப்போதும் தொடர் கதைதான்.
தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் இதில்தான் இருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந் திருப்ப தால் இம்மாதிரியான நேர்முகத் தேர்வுக்கு போகிறவர்கள் முதலிலேயே மனதுக்குள் ஒருவித படபடப்பை ஏற்றிக் கொண்டு விடுகிறார்கள். நாம் இயல்பாக இருக்க வேண்டும் என்று வீட்டில் தலைவாரி புறப்படும்போது மனதில் போட்ட தீர்மானம், நேர்முகத் தேர்வு அலுவலகப் படிக்கட்டில் கால் வைத்ததுமே மடிந்து போவது முதல் அத்தியாயம்.
உலகத்தலைவர்களின் பெயர்கள் தொடங்கி கடைசியாக சுதந்திரம் பெற்ற நாடுகள் வரை மனதில் புதைத்து எந்தக் கேள்வி என்றாலும் நான் ஓ.கே என்று புறப்பட்டுப் போகிறவர்களிடம், `நீங்கள் இந்த அலுவலகத்தில் எத்தனை படியேறி நேர்முகத் தேர்வுக்கு வந்தீர்கள்?' என்று கேட்பவர்களும் உண்டு. சுற்றுப்புறத்தை கவனிக்கிறீர்களா, உங்களைச் சுற்றியுள்ள இன்னொரு உலகம் உங்கள் பார்வையில் படுகிறதா என்பதற்காக இப்படியெல்லாம் கூட கேட்டு அதிர வைப்பார்கள். இம்மாதிரியான சமயங்களில் பதில் தெரியவில்லை என்றால் `தெரியாது' என்பதையே பதிலாக்குங்கள். அதை விடுத்து தெரிந்த பதில் போலவும், அப்போதுதான் மறந்த மாதிரியும் நடிக்காதீர்கள். நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறீர்கள்.
நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரிகளை நேரில் சந்திப்பது. அறைக்குள் அழைக்கப்பட்டதுமே பதற்றம் இல்லாமல் அறைக்குள் நுழையுங்கள். உங்களை அழைத்து விட்டார்கள் என்பதற்காக தள்ளுகதவைத் தள்ளிக் கொண்டு நேரடியாக உள்ளே நுழைந்து விடாதீர்கள். `மே ஐ கம் இன் சார்?' என்று நாகரிகமாக கேட்டபடி அறைக்குள் நுழையுங்கள். உள்ளே நுழைகிற அந்தக் கணம் முதலே நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், அந்தக்கணம் முதலே உங்களுக்கு நேர்முகத் தேர்வு ஆரம்பம் ஆகி விட்டதாகத்தான் பொருள். நீங்கள் அறைக்குள் எப்படி வருகிறீர்கள்? அதிகாரிகளை பார்த்து எப்படி வணக்கம் வைக்கிறீர்கள் என்பது முதல் உங்கள் தேர்வின் தொடக்கம்.
சில கேள்விகள் உங்களுக்கு சட்டென்று புரியாமல் இருக்கலாம். அதை `புரியவில்லை. தயவு செய்து திரும்பவும் கூற முடியுமா?' என்று கேட்டு அதன்பிறகு உங்கள் பதிலை சொல்லலாம். ஒருவேளை அந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், விடை தெரிய வில்லை என்பதை தயக்கமின்றி கூறுங்கள். எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்றிரண்டுக்கு பதில் தெரியாத பட்சத்தில் `தெரியவில்லை சாரி' என்று கூறி விடலாம்.
ஒருவேளை தெரியாது என்று சொல்லி விட்டால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து கொண்டு சிலர் தவறான விடைகளை கூற முயற்சிக்கலாம். அது `ஒத்தையா ரெட்டையா' கதையாக அமைந்து உங்கள் வெற்றிக்கான வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும். அய்ந்து நிமிடம் தேர்வாளர்கள் இப்படி உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் `சமாளிப்பாளரா? நேர்மையாக அணுகுபவரா' என்பதை கணித்து விடுவார்கள். கேள்விகள் முடிந்தது என்று அவர்கள் அறிவித்ததும், மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு புறப்படுங்கள்.
No comments:
Post a Comment