நம்முடைய வீடுகளில் வெளிச்சம் இருப்பதற்காகவும், தூய காற்றோட்டம் இருப்பதற்காகவும்தான் ஜன்னல்கள் வைத்துக் கட்டப்படுகின்றன. அக்காலங்களில், ஜன்னல்களை உயரத்தில் சிறியதாக, சிறைக்கூட அறைகளில் பின்புறத்தில் மேல்பகுதியில் கொஞ்சம் வெளிச்சம் (காற்றோட்டமே பெரிதும் வர இயலாதபடி) கட்டி வைத்தனர் மனையடி சாஸ்திரம் பார்த்த நமது முன்னோர்கள் - உயரமான வாசற்கதவு நிலைகளும்கூட இருக்காது. நாலடி, நாலரை அடி அளவு வாசல்கால்கள் நிலைகள் இருக்கும்! நம் வீட்டிற்குப் புதிதாக வருபவர்களை வரவேற்கும்போதுகூட, நாம், குனிந்து வாருங்கள்; தலையில் இடித்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டேதான் வருவது வழக்கமாக இருந்தது!
இன்று அப்படி இல்லை. நல்ல வெளிச்சம், காற்றோட்டம் வரும் வகையில் ஏராளமான ஜன்னல்கள் வைத்தே கட்டப்படுவதுடன், அந்த ஜன்னல்கள் பெரிதாகவும், சுவர்கள் பகுதிகூட குறைந்து பெரிய ஜன்னல்கள் பகுதியே அதிகம் என்ற அளவில் வீடுகள் புது வகையில் உருவாக்கப்படுகின்றன! (வாஸ்து மூட நம்பிக்கை; இப்போதும் பலரைப் பாடாய் படுத்துகிறது).
எமது நண்பர் - வழக்கறிஞர் பழனியப்பன் (காரைக்குடியில்) அவர்களது புராதன வீட்டுக்கு அவ்வட்டாரத்தில் பெயரே ஆயிரம் ஜன்னல் வீடு என்பதாகும்! அந்தக் காலத்தில் அவ்வட்டாரத்தில் அது ஓர் அதிசய வீடு ஆகும்!!
அப்படி ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம் சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில், நல்ல புத்தகங்களை வாங்கி, வீட்டில் வைத்து, குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் படித்து, விவாதித்து அறிவு பெறுவதும் மிகவும் இன்றியமையாத் தேவையாகும்! பல வீடுகளில் சாமி படங்களை ஏராளம் மாட்டுவதற்கு ஒரு புதிய காரணத்தை வருமான வரி, விற்பனை வரித் துறை அதிகாரிகள் கூறி, நேற்று ஏடுகளில் வந்துள்ளது; அதன் பின்னால்தான் கறுப்புப் பணத்தை - கணக்கில் வராத பணத்தை ஒளித்து வைத்திருக்கிறார்களாம்! என்ன விநோதம் பாருங்கள்!!
குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தாய்ப்பால் சத்துள்ள ஊட்டச்சத்துதான். அதனால் அந்தத் தாய் அறிவுள்ள தாயாக, படித்து தன் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் தாயாக அமைதல் அவசியமல்லவா?
நம் குழந்தைகளைப் புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு அதில் ஒரு ஆர்வத்தை ஊட்டுங்கள். நல்ல புத்தகங்களை - முதலில் நகைச்சுவைப் புத்தகங்களை - பீர்பால், முல்லா, தெனாலி இராமன் போன்ற கதை நூல்களைக் கொடுங்கள்; படிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் ஏற்படுத்துங்கள்.
பெற்றோர்களாகிய நாமும் (தாத்தா பாட்டிகளுக்கு இதைவிட முக்கிய வேலைதான் வேறு வேண்டுமோ?) அவர்களோடு அமர்ந்து அதில் சில பக்கங்களைப் படித்து, அதுபற்றி அவர்களது கருத்துரைகளைக் கேட்டு - விவாதித்து - ஒரு சுவையை ஏற்படுத்திட, ஊக்கப்படுத்துங்கள் - அவர்கள் சொன்னபடி செய்யுங்கள்.
பொது நூலகங்களுக்கும், நூல் விற்பனை நிலையங்களுக்கும் அழைத்துச் செல்ல ஒரு விடுமுறை நாளை குழந்தைகளுக்கென ஒதுக்கிவிடுங்கள்.
பொம்மைக் கடைகள் பிறகு; புத்தகக் கடைகள் முதலில் என்பதுபோல அவர்களைப் பழக்குங்கள்; கட்டாயப்படுத்தினால், காரியம் தோல்வியில் முடிந்துவிடும்; கவனமாக இருங்கள். புதுடில்லியிலிருந்துவரும் சம்பக் (Champak) (ஆங்கிலம்) சென்னையிலிருந்து வரும் பெரியார் பிஞ்சு ஏடுகளை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!
ஓடி விளையாடுதல் உடலுக்கு நல்லது.
தேடி புத்தகங்களைப் படிக்க வைப்பது அவர்களது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது!
சிறு வயதிலிருந்தே இப்படி புத்தகம் படிக்கும் பழக்கம் தொடங்கி - நம் குழந்தைகளைப் பழக்கிவிட்டால், அவர்கள் சாணை தீட்டப்பட்ட கூர்மையான ஆயுதங்களாக - அறிவு ஆயுதங்களாக - அவர்கள் வருங்காலத்தில் பளபளப்பர். பண்பாடு அடைவர்; பகுத்தறிவின் உச்சத்தை எட்டுவர்!
தின்பண்டங்கள் தேவைதான்; அதிலும் கெடுதி இல்லாதவை முக்கியம் என்பதுபோல், புத்தகங்கள் அவர்களது அறிவுக்கு உணவு. நல்ல ஊட்டச்சத்து அவர்களை வளர்க்கும் - வாழ்விக்கும் என்பது உறுதி! ஊக்கப்படுத்தி வளருங்கள்!!
புத்தக வெளிச்சம் அவர்களது அறியாமை இருளைப் போக்கட்டும்!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி