Wikipedia

Search results

Friday, October 18, 2013

மகனுக்குத் தந்தை எழுதிய கவிதை!

பெற்றோர் - பிள்ளைகள் எப்படி வளர்ந்து, உலகின் தலைசிறந்தவர் களாவதைவிட, அவர்கள் சீரிய மனிதர்களாக ஆவதுதான் மிகவும் விரும்பத்தக்க ஒன்று என்பதை, பிரபல ஆங்கிலக் கவிஞர் ரட்யார்டு கிப்ளிங் (Rudyard Kipling) அவர்கள் எழுதிய ஓர் கவிதையின் மொழியாக்கம், கருத்தாக்கமாக இங்கே தரப்படுகிறது! (மகன் என்பது மகளுக்கும்தான் என்று நாம் புரிந்துகொள்வதே சாலச் சிறந்தது).

இந்தக் கவிதைக்கு அவரிட்ட தலைப்பு  if - இப்படியிருந்தால் என்பதாகும்!

மகனே, மற்றவர்கள் நம்பிக்கை இழந்து உன்னைக் குறை கூறும் நிலை ஏற்பட்டாலுங்கூட,
நீ தலைநிமிர்ந்தே நிற்கும் நிலையைக் கடைப்பிடி!

மற்றவர்கள் உன்னை சந்தேகக் கண்கொண்டு
பார்த்தால்கூட, ஆதங்கப்படாமல்
அதற்கும் ஒரு சலுகை காட்டு மகனே!

எப்போதும் காத்திருக்கும் நிலை என்றால்கூட,
அதையும் ஏற்க நீ பழகிவிடுவாயானால்
களைப்படையாமல் பொறுமை காட்டி,
அதனையும் ஏற்கும் குணம் உன்னிடத்தே
அமையுமானால், அல்லது
பிறரது பொய்யுரைகள் - அவச்சொற்கள் -
உன்னைத் துளைத்திடும் கொடுமைக்கு ஆளான போதிலும்கூட,
நீ பொய்யுரைகளை முதலாக்கி வாழாதே! அல்லது
உன்னை மற்றவர் வெறுக்கும் நிலை ஏற்பட்டாலுங்கூட
அதற்காக உன் வாழ்வில் வெறுப்பு நுழைய
உன் இதயக் கதவைத் திறக்காதே!

வாழும்போதுகூட மிக நல்லவனாக நீ உன்னைக் காட்டிக் கொள்ளாதே!

ரொம்ப புத்திசாலிபோல் பேசிட வேண்டும் என்று கூட எண்ணாதே!

நீ கனவு காண முயற்சிப்பதில் தவறில்லை
ஆனால், அந்தக் கனவு (விழைவு, விருப்பங்களை)
உனக்கு எஜமானனாகுவதை அனுமதிக்காதே!

நீ சீரிய சிந்தனையாளன் என்றாலும்கூட
அந்தச் சிந்தனைகளே உன்னை ஆட்டிப்படைக்கும்
அளவுக்கு அதற்கு அடிமையாகி விடாதே!

வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் நீ
சந்திக்கும் வாய்ப்புக்களைப் பெறும் நிலை ஏற்பட்டால்கூட
இரண்டையும் - இவைகள் அடிக்கடி மாறுபவைகளே
என்பதைப் புரிந்து, இரண்டு நிலைகளையும்
சமமாகவே பார்க்க, ஏற்க, பழகிக் கொள்!

உனது கருத்துகள், எண்ணங்களைக்கூட
திரித்துக் கூறும் அயோக்கியர்களின் செயலையும்,
அதை நம்பிடும் முட்டாள்கள் வெட்டும் குழிகளையும்கூட
மனமுடையாமல் சகித்துக் கொள்ளப் பழகிடுவாயானால்,
அந்த உடைந்த ஆயுதங்களை வைத்து, உன்னை அவர்கள்
வீழ்த்திட முடியாது என்ற தெளிவுடனும், உறுதியுடனும்
நிற்கவும் எப்போதும் பழகிக்கொள்!

அன்பு மகனே,

நீ கஷ்டப்பட்டு குவித்த ஏராளமான வெற்றிகளைக்கூட, சிற்சில நேரங்களில், திடீரென இழந்துவிடும் அபாயம் ஏற்படலாம். அப்போதுகூட,
மனந்தளராதே! வருந்தாதே!
இப்படி இழப்பு ஏற்பட்டுவிட்டதே என்று ஏக்கப் பெருமூச்சுகூட விடாதே!

முன் எப்படித் தொடங்கி உழைத்து வெற்றிகளைக் குவியலாக் கினாயோ அதே வேகத்தில் - உன் இதயத் துடிப்புகளையும், நரம்புகளையம் புடைக்கச் செய்து கிளம்பி,
மீண்டும் இழந்தவைகளை வென்றெடுத்து மீட்கும் வல்லமை என் வாழ்வில் எனக்கெப்போதும் உண்டு என்ற உறுதியின் உச்சத்தை தொடு மகனே,
இதன் பின், எச்சங்கள் தானே உனக்கு ஏகமாய்க்
குவியும் என்பது உறுதி!

இதற்குத் தேவை ஒன்றே ஒன்று; அதுதான் உன் நெஞ்சுறுதி!

நீ எவ்வளவு பெருங்கூட்டத் தோடு இருந்தாலும்
உனது தனித்தன்மையான நற்பண்பைக்
காத்துக் கொள்ளும் வல்லமையோடு வாழ்வாயாக!
அல்லது நீ நடைபோடுவது மிகப்பெரிய ராஜபாட்டையானாலும்
உன் அருகில் இருப்பவர் பல ராஜாக்கள்
என்ற நிலை வந்தபோதுகூட
உனது எளிமை உணர்வை இழந்து விடாதே!

இப்படி வாழ்ந்தால், உனது எதிரிகளோ,
உன்னுடன் உள்ள உனது (ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய) நண்பர்களோகூட
உன்னை வருத்தமுறச் செய்ய முடியாது!

மற்றவர்களோடு இணைத்து என்னை எண்ணுகிறார்களே
என்று நீ நினைத்தாலும்கூட, அதற்கும் அதி முக்கியத்துவம் தரவேண்டாமே!

மன்னிக்கப்படாத உனது காலத்தில், ஒரு 60 வினாடிகள்
ஓடிவந்த தூரம்போல எண்ணிக்கொள்!
எல்லாவற்றையும் இணைத்துப் பார்!
இந்தப் பூமியும் அதனுள் அடங்கிய அனைத்தையும்
நீ பெற்ற இன்பத்தை அடைவாய் மகனே,

இவை எல்லாவற்றையும்விட, மேலான ஒன்றை நீ அடையவேண்டும்
அதுதான் நான் மனிதன் ஆனேன்
என்பதைக் காட்டும் வண்ணம் உன் வாழ்க்கை அமைவது!

அதனினும் சாலச் சிறந்தது வேறு எதுவுமில்லை!

உனது அன்புத்தந்தை

- என்னே முத்தான, சத்தான, சொத்தான அறிவுரை, அறவுரை!
இளைஞர்களே! இவைகளை அசைபோட்டுச் சிந்தித்துச் செயல்படுங்கள்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

No comments:

Post a Comment