Wikipedia

Search results

Thursday, March 17, 2016

டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் தமிழகத்திற்கு வருகின்றன


டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் மாநாட்டுக்குவருகின்றன
 
இரண்டே நாட்கள் தான் இடையில் -  உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

புரட்சிப் பூபாளம் பாடுவோம் - வாரீர், வாரீர்!!

தமிழர் தலைவரின் அன்பழைப்பு

 

பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் - திராவிடர் கழகம் - இருக்காது என்று ஆரூடம் கணித்த ஆலமரத்தடி ஜோசிய ருடன் அவாளின் அமைப்புகளும், இன்று பெரும் பதற்றத்தில் துடிக்கின்றன - நெருப்பில் காலை வைத்தவன் நிலைபோல!

காரணம் தந்தை பெரியார் என்ற தத்துவம். அய்யா உடலால் மறைந்து 43 ஆண்டுகளுக்குப்பின் பேருருவாய் (விஸ்வரூபம்)  இந்தியாவின் பல மாநிலங்களிலும், இளைய தலைமுறையினரின் பாசறையான பல்கலைக் கழகங்களிலும் தோன்றி, ஆரிய வர்ணாசிரமத்தின் நச்சுப் பல்லை அகற்றிட நாடு தழுவிய உணர்வாளர்களாக உள்ளார்கள்!

மாணவ சிங்கக்குட்டிகளால்
எரிக்கப்பட்டது மனுதர்மம்

மனுதர்ம சாஸ்திரம் என்ற ஜாதிக்கான மூலத்தை அவர்கள் நெருப்பில் போட்டுப் பொசுக்குகிறார்கள். பெரியாரும், - அம்பேத்கரும் செய்தவை, வரலாறு திரும்பும் என்பதற்கு எடுத்துக்காட்டாக டில்லி - மற்ற வட மாநிலப் பல்கலைக் கழக மாணவப் புரட்சியாளர்களால் சுட்டெரிக்கப்படுகிறது!

பெரியாரின் லட்சியப் பயணம் “சுய அபிமான்” என்ற ஹிந்திச் சொற்களில் சுயமரியாதை பயணம் செய்கிறது.

தோழர்களே உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

அந்த மாணவச் சிங்கக் குட்டிகள் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகத்தில் - நமது மாநாடுகளுக்கு வந்து, கொள்கை முழக்கங்களை எழுப்ப உற்சாகத்துடன் கிளம்பி வருகின்றனர்.  அவர்களே பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கொள்கை முழக்கமும், சுயமரியாதைச் சூளுரையும் எடுக்கும் பாசறையாக பெரியார் உலக மாநாடுகளை எண்ணும்போது,
என்னருந்தோழர்காள்,

எம் அரும் கொள்கைக் குடும்ப உறுப்பினர்களே! நீங்கள் வீட்டிலா இருக்கப் போகின்றீர்கள்? லட்சோப லட்சமாய் திரளும் கருஞ்சட்டை வீரர்களில் உங்கள் முகம் தெரிய வேண்டாமா? உங்கள் பங்களிப்பு மிளிர வேண்டாமா?

1.12.1959 புரட்சிக் கவிஞரின் ‘குயில்’ ஏட்டில் ‘கேட்டலும் கிளத்தலும்‘ என்ற பகுதியில் இதோ ஓர் செய்தி. அப்படியே தருகிறோம்.
திராவிடர் கழகம் செயலற்றுப் போகுமா?
- புரட்சிக் கவிஞர் பதில்

கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று........................................................................... எண்ணுகிறார்.  உங்கள் கருத்தென்ன?
சித்தானந்தம், முக்தியால்பேட்டை.

கிளத்தல்: ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. தி.க. அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்துக்கள் இயற்கையோடியைந்தவை. தி.க அழிவது என்பது இந்த ஊழியில் இல்லை.

புரட்சிக் கவிஞர் பொருள் மிகுந்த விடையின் ஆழம் என்ன? அகலம் என்ன? நீளம் என்ன - புரிய வேண்டுமா?
உடனே புறப்படுங்கள் - தாமதியாமல் திருச்சி - சிறுகனூர் பெரியார் உலக  மாநாடுகளுக்கு

ஜெர்மன் பேராசிரியரும் வருகிறார்

ஜெர்மன் நாட்டிலிருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் பெரியார் பற்றாளர் பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ்  மாநாட்டில் பங்கேற்கிறார். (இவர்தான் 2016 ஜூலையில் பெரியார் பன்னாட்டு பகுத்தறிவாளர்கள் மாநாட்டை ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடத்திடத் திட்டமிட்ட ஆய்வுப் பேராசிரியர் ஆவார்!)

‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’
என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிக்கான
இலக்கியம் அல்லவா இம்முயற்சி, அது மட்டுமா?

ஏப்ரல் 9அன்று பீகார் முதல் அமைச்சருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது!

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் அமெரிக்கப் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருக்கு “சமூக நீதிக்கான வீரமணி விருது” வழங்கும் பெரு விழா - கொள்கை நிகழ்வாக டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம இளங்கோவன் ஆகிய இயக்குநர்களால் நடத்தப்பட உள்ளது.

ஆலமரம் மட்டுமல்ல, தழைத்த விழுதுகளும் பலமாகி உலக அளவில் உயர்ந்து நிற்கிறது என்பது எதைக் காட்டுகிறது?
ஊழி உள்ளவரை தி.க.வை அழிக்க முடியாது என்பதைத் தானே!
பெரியார் இயக்க வெற்றிக்கு என்றும் உரமிடுபவர்கள் அதன் கொள்கை எதிரிகள்தானே!

தனித்தும் பலம் வாய்ந்த அமைப்பு! எதிர்ப்பாலும் வலிமை மிக்கது இவ்வமைப்பு - அதைக் காண வேண்டுமா?

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் 10.3.1945 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுப்பிய பொறிதட்டிய கேள்வி இதோ: சிந்தியுங்கள்.

“இந்த பல ஆயிரம் வருஷங்களில் - கீழ் ஜாதியாய்ப் பிறந்து, மேல் ஜாதியாய் செத்த மனிதன் (ஹிந்து மதத்தில்) ஒருவன்கூட கிடையாது.

ஜாதியே இல்லாமல் பிறந்து ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை; வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்ற அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ, “சாமியாய், ரிஷியாய், மன்னனாய், மகாத்மாவாய்” செத்து இருக்கலாம்.

ஆனால் ‘பறையனாய்ப்’ பிறந்து ‘பிராமணனாய்’ செத்தவரோ, ‘பிராமணனாய்’ பிறந்து ‘பறையனாய்’ செத்தவனோ என்றும்‘ இல்லை.” (‘குடிஅரசு’ 1945)

இன்னும் இரண்டே நாட்கள்தான்

மாநாடு நாளை மறுநாள் இன்னும் இரண்டே நாட்கள்தான் இடைவெளி!
வந்து பாருங்கள்!

புதியதோர் புரட்சியின் பூபாளம் அங்கே பாடப்பட்டு, வீறு நடை போட்ட வீரர்கள் கோட்டமாக அதன் செயல்பாடு  பொங்குமாங் கடலெனப் பொங்கி வழியும் காட்சியைக் காண வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

கி.வீரமணி   
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
17.3.2016

Sunday, March 6, 2016

இதுதான் “பார-தீய - (ஜனதா - ஆர்.எஸ்.எஸ்.) கலாச்சாரம் - புரிந்து கொள்வீர்!

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குக் கருத்தாளர் களை - பெரியார் - அம்பேத்கர் - காரல் மார்க்ஸ் சிந்தனை வயப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்களை அறவே அழித்து விரட்டிட, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP (ஏ.பி.வி.பி.) என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிட்டே ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் - மாணவர் தலைவர் கன்னையாகுமார், பேராசிரியர் கிலானி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
அடக்கு முறைகளால் லட்சியவாதிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், மாறாக, எரியும் நெருப்புக்கு எண்ணெய் - அதுவும் பெட்ரோல் ஊற்றியதுபோல மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர் இந்த ‘கோயபெல்ஸ்சின் குருநாதர்கள்’!
1. வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதக் குழு கன்னையாகுமாரை வாழ்த்தியதாக பொய்க் குற்றச்சாட்டு உடனடியாக கிழிந்து தொங்கியது; அந்த இணையதளமே தன்னுடையதல்ல - போலி என்று பதில் வந்தது.
2. போடப்பட்ட தேச விரோத முழக்கங்கள் Super Imposed on that video என்று ஆய்வில் நிருபிக்கப்பட்டு விட்டது.
செய்தியாளரும் முன்பே அது தன்னால் கொடுக்கப் பட்டதல்ல, திட்டமிட்டே சேர்க்கப்பட்டது என்று கூறி விட்டார்!
உள்துறை அமைச்சர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பலரும் இதற்குப் பொறுப்பேற்று சீரிய ஜனநாயக மரபு காக்க என்ன செய்திருக்க வேண்டும்? தாங்களே முன் வந்து பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டாமா? - சொரணையிருந்தால்!
பா.ஜ.க.வின் பாரதீய கலாச்சார தூதுவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கன்னையாகுமார் நாக்கைஅறுத்தால் ரூ.5 லட்சம்“
“கன்னையாகுமார் தலையை வெட்டினால் ரூ.11 லட்சம்“
- இது என்ன ஜனநாயக நாடா? காட்டு மிராண்டிகள், காபாலிகர்கள் ஆளுமையின்கீழ் நடக்கும் காட்டு நிர்வாகமா?
இது எந்த, யாருடைய தைரியத்தில் நடை பெறுகிறது?
இவர்கள்  குண்டர் தடுப்பு சட்டம், தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்குள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இதற்கு முன், ஆட்டுக்கறி சாப்பிட்டவரை, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று  அக்லக் என்ற முஸ்லிம் உ.பி.யில் கொல்லப்பட்டுள்ளதும், பலவிடங்களில் வன்முறை - ஒடுக்கப்பட்டோரை செருப்புக்கும், நாய்களுக்கும் ஒப்பிட்ட அமைச்சர்கள் எவ்வித பதவிப் பறிப்புக்கும் ஆளாகாமல் பவனி வந்து ராஜ்ய பாரம் நடத் துவது தான் - மோடி  கொடுத்த வளர்ச்சியா? முன்னேற்றமா? மாற்றமா? மக்கள் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் தொடங்கி பல காவல்துறை தலைவர்கள், நிர்வாகிகள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் நேற்றுகூட ஒரு கண்டன அறிக்கை- இந்த சட்டம் செயல்படாதுள்ள அவலத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனரோ!
இந்த கலாச்சாரம் பரவினால் மீண்டும் காட்டுத் தர்பார் (Jungle Raj) ஆட்சிக்குத்தானே செல்லும் சிந்தியுங்கள்.
- ஊசி மிளகாய்

Friday, March 4, 2016

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வகையறாக்கள் “செலக்டிவ் அம்னீஷியா”

மக்கள் மறதியே தமது பொது வாழ்வின் பொய்யுரைகளுக்கு அடிக்கட்டுமானம் என்று கருதி ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் அவரது ‘ஆத்மார்த்த’ சீடகோடிகளாகி அரசியல் பதவிகளை அனுபவிப்பவர்களான பா.ஜ.க.வுக்கும், திடீர் தேச பக்தி பீறிட்டுக் கிளம்பி பெரும் பிரவாகமாய் ஓடத் தொடங்கி விட்டது!
எங்கெங்கு காணினும் தேச பக்தி! மத்திய பல்கலைக் கழகங்களில் எத்தனை அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்ற தாக்கீது!
ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, டி. இராஜா முதலிய பல்வேறு கட்சியினரையும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர், மாணவர் கன்னையாகுமார் போன்ற பலர்மீதும் தேசத் துரோக (Anti - National) குற்றச்சாட்டு - 124A  செக்ஷனின் பிரயோகம்!
இவர்களது  பூர்வ சரித்திரம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்ற போலி நினைப்பு.
‘நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது’ என்று பாட்டிகள் கூறும் கிராமிய அனுபவ மொழி!
இந்தியாவின் தேசியக் கொடியாக  மூவர்ணக் கொடியை ஏற்க மறுத்தவர்கள் - மறுப்பவர்கள் இன்றும் அவர்கள் தலைமையகத்தில் (நாகபுரி) காவிக் கொடி, பாரத் மாதா கொடியை ஏற்றும் நபர்கள்.
ஹிட்லரின் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் இவர்தம் முந்தைய அடையாளம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடு (ஆங்கிலம்) ‘ஆர்கனைசர்’ அதன் மூன்றாவது இதழில் (17.7.1948ல்) “இந்தியாவின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியை ஏற்க முடியாதென்றும், காவிக் கொடியைத்தான் “தேசியக் கொடியாக” அறிவிக்க வேண்டும்“ என்றும் எழுதியது!
அது மட்டுமா?
“இந்தியாவை ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதையும் ஏற்க முடியாது. இந்தியா ஒரு இந்துத்துவா நாடு. செங்கோட் டையில் காவிக் கொடியைத் தான் பறக்க விட வேண்டும்’’ என்று ஆகஸ்டு 14, 1947 ஆர்கனைசர் ஏடு எழுதியது - மறந்து போய் விட்டதா? அல்லது மறைக்கப்படுகிறதா?
“இந்திய மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்த வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள் ளது. ஆனால் ஹிந்து மக்கள் இதற்கு ஒரு போதும் மரியாதை தர மாட்டார்கள். மூன்று வர்ணம் என்று கூறுவதே தீங்கானது. மூன்று வர்ணத்தை முன்னிறுத்துவது மோசமான மனநிலையை மக்களிடம் உருவாக்கும். மேலும் இதனால் நாட்டிற்கு கேடு உண்டாகும்“ என்று எழுதியது.
இது மட்டுமா? அவர்களது தத்துவக் கர்த்தா குருநாதர் கோல்வால்கர், அவரது ‘ஞானகங்கை’ (Bunch of the thoughts) புத்தகத்தில் என்ன கூறுகிறார்?
“நம்முடைய தலைவர்கள் நாட்டிற்கு புதிய கொடியை உருவாக்கியுள்ளார்கள். ஏன் அவ்வாறு செய்துள்ளார்கள்? நம்முடைய நாட்டிற்கு சொந்தமாகக் கொடி இல்லையா?
கடந்த ஆயிரக்கணக்ககான ஆண்டுகளாக நமது நாடு தேசிய சின்னம் இல்லாமலா இருந்தது? சந்தேகமில்லாமல் இவற்றை நாம் பெற்றிருந்தோம். இப்படி இருக்கையில் ஏன் இந்த முட்டாள்தனமான வேலையைச் செய்கின்றனர்?”
இப்போது இவாள் செய்வது...?
முன் இவர்கள் பதவி ஏற்றபோதுகூட இந்திய தேசியக் கொடியில் நடுவில் உள்ள ‘அசோக சக்கரத்தை’ அப்புறப்படுத்த வேண்டுமென்று அத்வானி போன்ற தலைவர்களேகூட கூற வில்லையா?
வசதியாக இவையெல்லாம் இப்போது “செலக்டிவ் அம்னீஷியா” நோய்க்கு ஆளாகி விட்டதா ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அமைப்புக்கு?
பாபாசாகேப் அம்பேத்கரை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் வாய்மையின்றி வசைமாரி பொழிந்தவர்கள் இன்று அம்பேத்கர் முகமூடியை அல்லவா அணிந்து அவனியில் பவனி வந்து அவரையும் அணைத்தே அழிக்க முயலுகின்றனர்!
அம்பேத்கரே சொன்னாராம் காவிக் கொடியே தேவை என்று! இப்படி ஒரு கொயெபெல்ஸை மிஞ்சும் புருடா இவர்களது ஏட்டில் பரப்பப்பட்டு வருகிறது.
அட திடீர் தேசபக்த திலகங்களே, கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் அய்யா!
- ஊசி மிளகாய்

Tuesday, March 1, 2016

அன்பிற்கும்கூட வேண்டும் அடைக்கும் கதவு!

‘அன்பிற்கும், உண்டோ அடைக் கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். வற்றாதது அன்பு என்பதை வலியுறுத் தவே அவ்வாறு ஆழமாகச் சொல்லி யிருக்கிறார் - வள்ளுவர் என்ற அரிய நம் சிந்தனையாளர். உண்மைதான்.
ஆனால், அந்த ‘அன்பே’கூட பற்பல நேரங்கள் வெளியில் கூற முடியாத - அன்பால் ஏற்படும் அவதி யாகக்கூட மாறி விடுகிறதே - நமது அன்றாட வாழ்க்கையில். இல்லையா?
நமது நண்பர்கள் - அன்பர்கள் பலர் நம்மீதுள்ள அன்பால் நம்மை சில சின்னச்சின்ன நெருக்கடிக்கும்கூட ஆளாக்கும்போது, ‘அய்யய்யோ இந்த அன்புக்கு சற்று நேரக் கதவடைப்பு செய்யக் கூடாதா?’ என்றுகூட தோன்றவே செய்கிறது!
வேகமாகச் சுழலும் அன்றாட வாழ்க்கையில், காலைப் பொழுதில் கடமையாற்றி நாம் அவசர அவசர மாக, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நமது நலம் விசாரிக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து, வந்தவர்கள் நிதானமாகப் பேசிக்  கொண்டிருக்கும்போது, நமது மனநிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இறுக்கத்தை அடைகிறது. அலுவலகப் பணிக்கு நேரமாகிக் கொண்டுள்ளது; வீட்டில் உள்ளோர் குடும்பக் கடமைகளில் அவசர அவசரமாக, பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புதல், மற்றவர்களுக்கு உணவுப் பரிமாற்றம் - இப்படி எத் தனையோ அவசரப் பணிகள்!
நலம் விசாரிக்க வந்தவர்களிடம் நாம் நம்முடைய அவசரத்தின் காரணமாக, நிதானமாகப் பேச முடியாதவாறு நிற்க வைத்தேகூட சில நேரங்களில் அவர் களிடம் பேசி, வேகமாக, அவர்களை அனுப்ப முயற்சித்தால், பற்பல நேரங்களில் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது!
நல்ல நட்புறவில்கூட ‘கீறல்’ விழுகிறது. நாம் வெளியே கிளம்பிக் கொண்டே இருப்போம்; அப்போது எங்கே போகி றோம் என்பதைக்கூட பகிரங்கப்படுத்த முடியாத நிலையும்கூட இருக்கும்; அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்ன நாம் அவரை வீடு தேடி ‘மெனக்கெட்டு’ போயிருக்கிறோம்; இந்த மனுஷன் நம்மை அலட்சியப்படுத்திவிட்டு இப்படி வெளியே கிளம்புகிறாரே என்று நம்மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்க முற்படுவார்களே தவிர, தவறு தங்கள்மீது உள்ளதே! நாம் என்ன அவரிடம் முன் கூட்டியே சொல்லியா வந்துள்ளோம்? தவறு நம்மீதுதானே என்று யோசிப்பதே கிடையாது!
ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான்!
எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களது வசதியை யும் அறிந்து சந்திப்பதே சாலச் சிறந்தது! இரண்டு சாராரையும் சங்கட நெருக்கடியி லிருந்து காப்பாற்றக் கூடியதும் ஆகும்!
அதுபோல உணவு பரிமாறிடும் போதுகூட அளவற்ற அதிக அன்பால் உணவு வகைகளைத் திணித்து அன்பால் கொல்ல முயற்சிக்கக் கூடாது.
சில பேருக்கு வெளியில் சொல்ல இயலாத உடல் உபாதைகளும் இருக்கலாம். அளவான உணவு எடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கு அறி வுரையும்கூட கூறியிருக்கலாம்; அதனால் அவர்கள் ‘மீதூண் விரும் பாத’வர்களாக இருப்பார்கள். அவர் களை நாம் அதிக உபசாரத்தினால் திணற அடிக்கிறோம் சிற்சில நேரங் களில் அப்போதெல்லாம் நம் மனம் கூறுவது இதுதான்; அன்பிற்கும் வேண்டும் அடைக்கும் கதவு - பற்பல நேரங்களில்.
அது மனித உறவுகளை சீராக வைத்திருக்க சிறப்பான உதவியாக அமையக் கூடும் - சரிதானே?
- கி.வீரமணி