Wikipedia

Search results

Monday, June 10, 2013

நச்சுணவு ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் கோழி பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். உணவு நச்சுணவாக மாற என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் நஞ்சுத் தன்மை ஏற்படும்?
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி:
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால் தான் நச்சுணவு (ஃபுட் பாய்சன்) ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்சினை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த கோழி இறைச்சித் துண்டோ கெட்டுப் போயிருக்கலாம்.
இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்ட தால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு நச்சுணவு அதிகம் ஏற்படுகிறது.
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவ வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக் காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள், அரிசி, பருப்பு போன்ற சமையலறைக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள். பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குளிர்பதனப் பெட்டிக்குள் தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும்.
சமையலறைப் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்ததால் அவற்றை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடா.
அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. காலாவதியான பொருள்களைப் பயன்படுத்தினாலும் நச்சுணவாக மாறும் வாய்ப்பு ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள்; எண்ணெயில் இருந்து கெட்டுப் போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப் போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
குளிர்பதனப் பெட்டியில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்த வரை நொறுக்குத் தீனிகளை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது. கோழி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக் கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள்.

1 comment:

  1. நல்லதொரு தகவல்.., பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete