Wikipedia

Search results

Tuesday, June 11, 2013

உண்மையான நாவன்மை எது?

நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.
மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.
நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம்.  எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:
நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.
இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.
என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.
எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்!  இல்லையா?
அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!
அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.
நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!
தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!
காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!
சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!
எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!
நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்
என்ற  கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!
நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!
எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.
அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?
எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!
- கி.வீரமணி


No comments:

Post a Comment