Wikipedia

Search results

Friday, June 14, 2013

ரிசர்வ் வங்கி பணிவாய்ப்பு

இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறு வனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ்வங்கி எனப்படும் ஆர்.பி.அய்., திகழ்கிறது. மத்திய நிதிய மைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் மட்டுமே கிளைகள் உள் ளன. இந்த கிளைகளில் உள்ள 525 உதவி யாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தக் காலி இடங் களுக்கு அரசு நிபந்தனைகளின் படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
காலி இட விபரங்கள்: ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களான ஆமதாபாத்தில் 25ம், பெங்களூருவில் 31ம், போபாலில் 25ம், புவனேஸ்வர் மற்றும் சண்டிகாரில் தலா 20ம், சென்னையில் 35ம், கவுகாத்தியில் 25ம், அய்தராபாத்தில் 23ம், ஜெய்பூரில் 17ம், ஜம்முவில் 16ம், கான்பூர் மற்றும் லக்னோவில் 25ம், கோல்கட்டாவில் 50ம், மும்பையில் 131ம், நாக்பூரில் 15ம், புது டில்லியில் 28ம், பாட்னா வில் 24ம் மற்றும் திருவனந்தபுரம்/கொச்சி யில் 15ம் உதவியாளர் காலி இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட உதவியாளர் காலி இடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பி யவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித் திருக்க வேண்டும்.
இத்துடன் கணினியில் வேர்டு பிராசசிங் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண் டும். எந்த மாநிலத்திலுள்ள காலி இடங் களுக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநில ஆட்சி மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-அய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இடங்கள் ஆன்-லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறை யிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.06.2013
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்: 20.07.2013,21.07.2013,27.07.2013,28.07.2013

Tuesday, June 11, 2013

உண்மையான நாவன்மை எது?

நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.
மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.
நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம்.  எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:
நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.
இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.
என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.
எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்!  இல்லையா?
அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!
அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.
நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!
தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!
காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!
சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!
எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!
நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்
என்ற  கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!
நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!
எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.
அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?
எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!
- கி.வீரமணி


Monday, June 10, 2013

நச்சுணவு ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் கோழி பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். உணவு நச்சுணவாக மாற என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் நஞ்சுத் தன்மை ஏற்படும்?
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி:
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால் தான் நச்சுணவு (ஃபுட் பாய்சன்) ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்சினை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த கோழி இறைச்சித் துண்டோ கெட்டுப் போயிருக்கலாம்.
இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்ட தால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு நச்சுணவு அதிகம் ஏற்படுகிறது.
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவ வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக் காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள், அரிசி, பருப்பு போன்ற சமையலறைக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள். பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குளிர்பதனப் பெட்டிக்குள் தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும்.
சமையலறைப் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்ததால் அவற்றை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடா.
அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. காலாவதியான பொருள்களைப் பயன்படுத்தினாலும் நச்சுணவாக மாறும் வாய்ப்பு ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள்; எண்ணெயில் இருந்து கெட்டுப் போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப் போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
குளிர்பதனப் பெட்டியில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்த வரை நொறுக்குத் தீனிகளை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது. கோழி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக் கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள்.

Sunday, June 2, 2013

இங்கிலாந்து நாட்டின் முதல் பிரதமர் யார்?

சர் ஹென்றி காம்பல் பானர்மேன் என்பவர்தான் இங்கிலாந்து நாட்டின் முதல் பிரதமராவர். அவர் 1905 இல் பதவியேற்றதற்கு அய்ந்து நாட்கள் கழிந்த பிறகுதான் பிரதமர் என்ற சொற்றொடர் அதிகார பூர்வமாகப் பயன் படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறு கூறுவது இழிவுபடுத்துவதாக இருந்ததாகும்.
முதல் அதிகார பூர்வ பிரதமர் என்று பொதுவாக அங்கீரிக்கப்பட்ட சர் ராபர்ட் வால்போல் இந்தப் பெயரை எப்போதுமே பயன்படுத்தவில்லை. அவரும் அவருக்குப் பின்னர் வந்தவர்களும் கருவூலத்தின் முதல் பிரபுக்கள் என்றுதான் தங்களை அழைத்துக் கொண்டனர்.  1905 டிசம்பர் 10 வரை காம்பல் பானர்மேனும் அவ்வாறுதான் தன்னை அழைத்துக் கொண்டார். முதன் முதலாக இப்பெயரை அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட அரசு ஆணையில் யார்க் ஆர்ச் பிஷப்புக்கு அடுத்த அதிகார நிலையில் பிரதமர் வைக்கப்பட்டார்.
சர் ஹென்றி கேம்பல் பானர்மேன் (1836-1908) ஹென்றி கேம்பல்லாகப் பிறந்தவர். பானர்மேன் என்ற பெயர் 1871இல் அவரது பெயருடன் சேர்க்கப்பட்டது. 1905இல் பதவியில் இருந்த ஆர்தல் ஜேம்ஸ் பால்ஃபோர் பதவி விலகியபிறகு கேம்பல் பானர்மேன் இங்கிலாந்தின் முதல் அதிகாரபூர்வ பிரதம மந்திரியாக ஆனார். வழக்கத்திற்கு மாறான பலம் பொருந்தி அவரது அமைச்சரவையில் எதிர்காலத்தில் பிரதமராக வந்த இருவர் (அஸ்குவைத்தும், லாயிட் ஜார்ஜூம்) சேர்க்கப்பட்டிருந்தனர். 1906 பொதுத் தேர்தலில் அவர் லிபரல் கட்சிக்காரர் களுக்குத் தலைமை தாங்கி  ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.
தாராளக் கொள்கை கொண்டவர் என்பதை விட அவரை தீவிரக் கொள்கை கொண்டவர் என்றே கூறலாம். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவதையும், அயர்லாந்துக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதையும்  அவர் ஆதரித்தார்.  முதியோர் ஓய்வூதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபட்டார். போயர் போரில் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் விலங்காண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்தார். தென் னாப்பிரிக்காவுக்கு சுயஆட்சி உரிமையை அளிக்க ஏற்பாடு செய்தார்.  வேலை நிறுத்தம் செய்யும் உரிமையைத் தொழிலாளர்களுக்கு அளித்த 1906 வர்த்தக வழக்கு சட்டத்தை நிறைவேற்றினார்.
தேர்தலுக்குப் பின் ஓராண்டு கடந்து 1907இல், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவருக்கு 1908இல் இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் தனது பதவியை விட்டு விலகினார். அவரை அடுத்து அஸ்குவித் பிரதமராக ஆனார். அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து டவுனிங் தெரு 10ஆம் எண் கொண்ட பிரதமர் இல்லத்திலேயே அவர் இறந்துபோனார்.
அவர் பேசிய இறுதி சொற்கள்: இதுவே எனது முடிவு அல்ல.

இந்தியப் பொருளாதாரம்

பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்-தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம், காசு கிடையாது.

 எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு பண்டத்தைக் கொடுத்து, மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்வார்கள். கூலியாட்கள், கைத்தொழில் செய்வோர், ஏவலாள் ஆகியோருக்கும் தானியமே கொடுப்-பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் - பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக ஏதும் கொடுப்பதில்லை.

பெருத்த மிராசுதார்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான், பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப் போட்டு வைத்திருப்-பார்கள். பண்டமாற்றைத் தவிர, சாதாரண மக்கள் பணத்தைப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.

ரூபாய், நாணயம் இவை நம் நாட்டு மொழியல்ல, சின்னப் பணம் அதாவது ரூ.1-க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும், எத்தனை பணம்? என்று தான் கேட்பார்கள். செல்வமுள்ளவனையும் பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலிய-வை-களிலும் 100 பணம் 200 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு-வார்கள். சமீப காலம் வரைகூட மலை-யாளத்தில் திருவாங்கூர், கொச்சி இராச்சியத்தில் சிவில் கோர்ட்டில், ரூபாய் என்று பிராது போடுவதில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும் அதைப் பணமாகப் பெருக்கி, அந்தப் பண எண்ணிக்கை-யைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்-பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே, பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை-விடச் சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால், பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்ட-மில்லையானால் வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலையில்லை. இதுபோலவே இதற்குமுன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கு முன் வந்த ஆரியர்-களுக்கும் இந்த நாட்டில் வேலையில்லை.

சாமி, பூஜை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படி-யில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்-கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கலியாணம் முதலியவை-களால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கை-யைத் தொடங்க வேண்டியிருக்கிறது. இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்-களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்-சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் மேற்கண்ட சடங்கு-களும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம் பூசை ஆகியவை-களுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்-கள் பெரும்பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. ஆகவே, இந்த மாதிரியாக-வெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில் தான் பொருளா-தாரத்தில் சீர் அடைய முடியும்? நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் கவனியுங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை, மேல்நாடுகளைப் பார்த்து - நாளுக்கு நாள் செலவை அதிகரித்து வருகின்றோம்; வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட அதிக ஆடம்பரங்களை விரும்புகின்றோம். இவை-யெல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்ற-மென்றோ சொல்லவில்லை. ஆனால், மேல்-நாட்டார் எப்படிப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தமது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக் கொள்கிறார்களோ, அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டு, வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டுதானே அதில் பிரவேசிக்க வேண்டும்? அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன்? மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து பன்மடங்கு இலாபம் அடை-கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு - இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானத்தோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்-கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை மதமும் கடவுளும் அடுத்த ஜென்மமுமேயாகும். மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும், அநேகமாய் எல்லாவற்றையும் மேற்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளு-கின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்-திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே - பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்-பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஆகிவிட்டது. அது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக்கும் குடியான-வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ் ஜாதிக்-காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவுகூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது உறுதி.

நமது பொருளாதாரக் கஷ்டமெல்லாம்- முதலாவது அனாவசியச் செலவுகளுக்கும் அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமேயாகும். 100-க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவதனா-லேயே வீணாகி விடுகின்றன.

இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கத்தில் பொருள்க-ளெல்லாம் போய்ச் சேரும் படியாகவும் விடுகின்றன.

மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும் சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவிடும்-படியான முறைகளே இங்கு வெகு காலமாக இருந்து வருகின்றன. அதாவது, புத்தியைச் செல-வழித்துக் குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்-விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியா-வின் பொருளாதாரக் குறைவிற்குக் காரணமாகும்.

- தந்தை பெரியார்

(களக்காட்டில், 27.12.1930-இல் சொற்பொழிவு, குடிஅரசு 18.1.1931)

Thursday, May 30, 2013

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்?

மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக் களாலான வேட்கை மய்யம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது அந்த வேட்கை மய்யத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டா கிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும்போதும் வேட்கை மய்யத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப் பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதை விட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணம்.

தொலைக்காட்சித் திரைகளில் உருவத்துக்குப் பின்புறம் நிழலுருவம் தோன்றுவது ஏன்?

தொலைக்காட்சி செய்கைகள் ஒளிபரப்புக்காக, உயர் அதிர்வெண் கொண்ட வானொலி அலைகளைப் போன்றே செலுத்தப்படுகின்றன. 

இவ்வலைகள் ஆன்டெனாக்களில் சேமிக்கப்பெற்று, பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியினுள் இருக்கும் மின்னணு மற்றும் படக்குழாய்களால் படங்களாக மாற்றப்படுகின்றன. 

தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் சுற்றி பல அடுக்கு உயர்மாடிக் கட்டடங்கள் சூழ்ந்திருக்குமானால், மின்காந்த அலைகளை, அக்கட்டடங்கள் மறிக்கும். இவ்வாறு மறிக்கப்பட்ட அலைகளையும் ஆன்டெனாக்கள் ஏற்றுக் கொள்ளுகின்றன. 

இந்த அலைகள் ஏற்கெனவே நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சேமிக்கப்பெற்ற அலைகளைவிட ஓரளவு நீண்டிருக்கும். இவ்வலைகளால் உருவாக்கப்படும் படம் மூலப் படத்திற்குப் பின்னால் நிழலுருவமாகக் காட்சியளிக்கும்.